தமிழ்நாட்டின் சட்டக் கல்விக்கு நீண்ட மற்றும் சுவாரஸ்யமான வரலாறு உண்டு. திரு. ஜார்ஜ் நார்டன் என்பவர்தான் சட்டக் கல்விக்கான யோசனையை மெட்ராஸில் முதன் முதலில் உருவாக்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் தனது வீட்டில் உரையாடல் வடிவில் நடத்தப்பட்ட முறைசாரா சட்ட வகுப்புகளிலிருந்து சட்டக் கல்வியின் தோற்றம் குறித்து அறியலாம்.

1852 ஆம் ஆண்டு கவர்னர் சர் ஹென்றி பொட்டிங்கரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி பிரசிடென்சி கல்லூரியாக விரிவுபடுத்தப்பட்டது. 1855 ஆம் ஆண்டு முதல் சட்டப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட திரு. ஜான் புரூஸ் நார்டன் பிரசிடென்சி கல்லூரியில் தனது விரிவுரைகளை ஆற்றினார். 1884 ஆம் ஆண்டு வரை பிரசிடென்சி கல்லூரியில் ஒரே ஒரு சட்டப் பேராசிரியர் மட்டுமே இருந்தார். 1884 ஆம் ஆண்டில் விரிவுரைகளுக்கு துணையாக இரண்டாவது பேராசிரியர் நியமிக்கப்பட்டு அவரிடம் பயிற்சி பணி ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டம் இரண்டு ஆண்டுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இத்திட்டம் வெற்றியடைந்ததால், 1886 ஜனவரி 1 முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இது தொடர்ந்தது.

பொதுக் கல்வி இயக்குநரான திரு. எச்.பி.கிரிக் சட்டக் கல்வியின் நிலையை மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். சென்னையில் மத்திய சட்டக் கல்லூரி அமைப்பதற்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்பினார். சட்டப் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளில் மாற்றங்கள் அவசியம் என்றும், ஒரு சுயாதீன நிறுவனம் நிறுவப்பட வேண்டும் என்றும் பொதுக்கல்வி இயக்குநரின் முடிவிற்கு அரசாங்கம் உடன்பட்டது. 1885 ஆம் ஆண்டு மாண்புமிகு நீதியரசர் முத்துசாமி ஐயர் இந்த திட்டத்திற்கு தனது
ஆதரவை வழங்கினார்.

லண்டனில் உள்ள சட்டக் கல்வி சபையின் ஆலோசனையின் பேரில்,பொதுக்கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் சட்டக் கல்லூரி ஒரு சுதந்திரமான நிறுவனமாக நிறுவப்பட்டது. 2 மே 1891 அன்று திரு. ரெஜினோல்ட் ஏ. நெல்சன் அவர்கள் முதல் முதல்வராக பணியமர்த்தப்பட்டார். எனவே, சட்டக் கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் மாளிகையில் இருந்தது.

புதிய சட்டக் கல்லூரியை முடிந்தவரை உயர் நீதிமன்றத்திற்கு அருகில் வைக்கும் திட்டமானது, உயர் நீதிமன்ற கட்டிடத்தின் மேற்கில் ஒரு கட்டமைப்பை அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க வழிவகுத்தது. அரசு கட்டிடக் கலைஞரான ஹென்றி இர்வின் புதிய சட்டக் கல்லூரி கட்டிடத்தை வடிவமைத்தார். ஜனவரி 9, 1899 முதல் சட்டக் கல்லூரி இந்த புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. சொந்தக் கட்டிடத்தைப் பெற்றதன் விளைவாக, சட்டக் கல்லூரி முழு நேர கல்வி நிறுவனமாக மாற்றப்பட்டது.

மெட்ராஸ் சட்டக் கல்லூரி நாட்டின் இரண்டாவது பழமையான கல்லூரி மற்றும் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சட்டக் கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது.

1953 ஆம் ஆண்டு மாநிலத்தில் சட்டக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கண்டது. சட்டப் படிப்புக்கான தனித் துறை உருவாக்கப்பட்டு, முதல் முறையாக சட்டப் படிப்புகளுக்கான சட்டக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டார்.

சட்டக் கல்லூரி 1959 ஆம் ஆண்டு தனக்கென ஒரு மாணவர் விடுதியைப் பெற்றது. கல்லூரி 1968 ஆம் ஆண்டு பிளாட்டினம் விழாவைக் கொண்டாடியது. சட்டக் கல்லூரி 1991 இல் 100 ஆண்டுகளை நிறைவு செய்தது. மேலும், 1999 ஆம் ஆண்டு கட்டிட நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. எழுபதுகளின் முற்பகுதியில், சட்டக் கல்லூரி தரமுயர்த்தப்பட்டு சட்டமுதுநிலைப் படிப்புகள் கொண்டுவரப்பட்டது.

தமிழை அலுவல் மொழியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டுவர வேண்டும் என்ற அரசு கொள்கை முடிவினை எடுத்ததன் பேரில், 1973-1974 இல் இருந்து, சட்டப் பயிற்று வகுப்புகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1976 ஆம் ஆண்டில் ஒரு புதிய இரண்டு மாடி கட்டிடமும், 1978 இல் ஒரு அரங்கமும் கட்டப்பட்டது . 1977-1978 இல் பெண் மாணவர்களுக்கான சட்டக் கல்லூரி விடுதி தொடங்கப்பட்டது. மேலும் 2007-ம் ஆண்டு சட்டக் கல்லூரி வளாகத்தில் உள்ள நூலகத்திற்காக புதிதாக இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது.

1981 நவம்பரில் மெட்ராஸ் சட்டக் கல்லூரியிலிருந்து சட்டப் கல்விகளுக்கான இயக்குநரகம் பிரிக்கப்பட்டது. இது சட்டக்கல்வித் துறையை மேம்படுத்த அரசாங்கம் எடுத்த ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். தற்போது சட்டக்கல்வி இயக்குநரகம், கீழ்பாக்கம், புரசவாக்கம், சென்னை- 600010 என்ற முகவரியில் உள்ள சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

1990 ஆம் ஆண்டு, டாக்டர் B.R.அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்த தினம் நினைவாக, சென்னை சட்டக் கல்லூரியானது, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்றுதமிழ்நாடு அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, 1997-98 கல்வியாண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

நமது சட்டக்கல்லூரி பல புகழ்பெற்ற மாணவர்களைக் கொண்ட உயர் மதிப்புமிக்க சாதனையைப் பெற்றுள்ளது . இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் (1987-92), முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்- திரு பதஞ்சலி சாஸ்திரி (1951 – 54) , திரு கோகா சுப்பா ராவ் (1958 – 1967) ), திரு.பி.சதாசிவம் (2013), முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்- திரு.வி.ஆர்.கிருஷ்ண ஐயர், திரு.பி.சத்தியநாராயண ராஜு, திரு. வி பாலகிருஷ்ண ஏரடி, டிஎம்டி பானுமதி,முப்பத்தியேழிற்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளும், அதில் திரு. மு. கற்பகவிநாயகம், திரு. வி.பெரியகருப்பையா, திரு.பி.டி.தினகரன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திரு. ப.சிதம்பரம், மாநில முதல்வர்கள் திரு. கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி, திரு. சி.சங்கரன் நாயர், இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் மற்றும் பல அரசு அதிகாரிகளும் இங்கு பயின்றவர்களே.

2018-2019 கல்வியாண்டிலிருந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நீதிப்பேராணை மனு எண். 11806 0f 2017 மற்றும் அரசாணை எண்.188/2017 நாள் 28.06.2018 இன் படி, உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூரில் அமைந்துள்ளது. இரண்டாகப் பிரிந்ததால் கல்லூரியின் பெயர் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பட்டரைப்பெரும்புதூர், திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. கல்லூரியில் 3 வருட எல்எல்.பி. பட்டப் படிப்பு மற்றும் 2 வருட எல்எல்.எம். நான்கு சிறப்புப் பிரிவுகளின் கீழ் முதுநிலை பட்டப்படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. 02.07.2018 அன்று முதல் பட்டரைப்பெரும்புதூரில் உள்ள வளாகத்தில் நமது சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.